குறள் 978
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.
பணிவு - கீழ்ப்படிகை; வணக்கம்; குறை; தாழ்விடம், எளிமை, பதுங்குகை
என்றும் - எல்லா காலங்களிலும்
பெருமை - மாட்சிமை, மிகுதி, வல்லமை, கீர்த்தி, அகந்தை, அருமை, புகழ், பருமை
சிறுமை - சிறுமை - அற்பத்தனம், இழிவு; கயமைத்தனம், கீழ்மை; இளமை; நுண்மை; குறைபாடு; வறுமை; பஞ்சம்; இளப்பம்; குற்றம்; நோய்; துன்பம்; மிக்ககாமம்; கயமை.
அணி - அலங்காரம், பெருமை, மாலை
அணியுமாம் - அலங்காரம் செய்த்துக்கொள்ளும் / பெருமை பேசிக்கொள்ளும்
தன்னை - தன்னைப் பற்றி
வியந்து - அதிசயம், பாராட்டு, மேம்பாடு
முழுப்பொருள்
பெருமை என்றென்பது பணியும். சிறுமை என்றென்பது பணியாது தன்னை கண்டு வியக்கும்.
உயர்ந்த மனிதர் எனப்படுவர் யாதெனில் பண்புகள் உடையவர். நிறையாக அன்பு செய்பவர். கனிவான சொற்களிலே பேசுபவர். தாரளமான மனப்பாண்மை கொண்டு ஒருவருக்கு வேண்டியவரை உதவி செய்வார். தன்னைவிட ஞானம் பெற்றவர்கள், கல்வி கற்றவர்கள், தருமம் செய்தவர்கள் இருப்பார்கள் என்று எண்ணி தன்னுடைய நிலையுணர்ந்து பணிவாக இருப்பார்கள். அத்தகையவர்கள் பெருமையாக பேசப்படுவார்கள்.
கல்வி பெறும் பொழுதும், ஞானம் பெறும், தருமம் செய்யும் பொழுதும் ஒருவருக்கு அகந்தை உருவாகும். அத்தகைய அகந்தையை அழிக்க ஒன்றே ஒன்றுதான் தேவை. அதுவே பணிவு.
சிறுமையானவர்கள் யாதெனில் திமிராக இருப்பவர்கள். தன் நிலையறியாது உளறி கொண்டு இருப்பவர்கள். திமிர்த் தெங்கி கொண்டு இருக்கும் பொழுத்தும் தன்னை உயர்வாய் நினைத்துக்கொண்டு தன்னை பற்றி கூச்சமே இல்லாமல் பெருமையாய் பேசிக் கொள்வார்கள். இவர்கள் தான் எல்லாவற்றிக்கும் காரணம் என்றும் தன்னை வியந்து கொள்வர்.
நற்குணம் நற்றறிவு, ஞானம், தருமம் இருக்கும் இடத்தில் என்றும் பணிவு இருந்தால் அது பெருமை.
திருவள்ளுவர் “என்றும்” என்று எல்லா காலங்களிலும் பணிவாக இருப்பவர்கே பெருமை என்று தெளிவுப்படுத்தி உள்ளார். சமய சந்தர்ப்பங்களில் மட்டும் முகஸ்துதி செய்யும் பணிவு பெருமையல்ல என்பதை நாம் இங்கு காணவேண்டும்.
ஆத்திச்சூடி
- உடையது விளம்பேல் (உடையது – தன்னிடம் உள்ளதை (சிறப்புகளை) விளம்பேல் – விளம்பரம் செய்யாதே/ தற்பெருமை பேசாதே.)
- வல்லமை பேசேல்.
- மிகைபடச் சொல்லேல்.
குறட் கருத்து (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
பணிந்து இனிய சொல்லி நிற்பார்
பண்பு நிறைஅன்பு செய்வார்
கனிந்த மொழி தன்னாலே
கடவுளையும் நண்பு கொள்வார்
விரிந்த மனம் கொண்டுயர்ந்தார்
வேண்டு மட்டும் உதவி நிற்பார்
நிறைந்துணர்ந்த பெரியோர்கள்
நிலையுணர்ந்து பணிந்து நிற்பார்
நிமிர்ந்தெங்கும் திமிர் செய்வார்
நிலையின்றி உளறி நிற்பார்
திமிர்ந்தெங்கும் தனைப் பெரிதாய்த்
தெய்வமென்றே கூறி நிற்பார்
குமையாமல் தனை உயரவாய்க்
கூறி நிற்றல் சிறியர் செயல்
இமையவரே தாம் என்று
இயம்பி நிற்பார் சிறுமையினால்
குறட் கருத்து 2 (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
ஊரினிலே மிகப் பெரிய மனிதர் என்றும்
உண்மையொன்றே வாழ்க்கை என்று கொண்ட வீரர்
யாரிடத்தும் எப்போதும் பணிந்து நிற்பார்
எங்கேயும் யார்க்கும் நன்மை செய்தே நிற்பார்
காரிடத்தின் மழை போலே ஏழையர்க்கு
கருணையுடன் எப்போதும் ஈந்தே நிற்பார்
ஊரிடத்தே எங்கேயும் தன் பெயரை
உச்சரிக்க அனுமதிக்க மறுத்தே நிற்பார்
இன்னொருவர் எப்போதும் ஆடி நிற்பார்
எங்கேயும் தான் என்றே கூறி நிற்பார்
மன்னவன் என் அறிவிற்கு ஈடு இணை
மக்களிலே யார் உண்டு என்றே கேட்பார்
தன் நிலையை உணராதார் அய்யோ அய்யோ
தாவிடுவார் கூவிடுவார் ஊர் சிரிக்க
தென்னவராம் வள்ளுவரும் இவருக்கென்றே
திருக்குறளைத் தந்துள்ளார் காண்க நீவீர்
ஜெயமோகன் (ஒரு வாசகர் கடிதத்தில் எழுதியது)
மணிவண்ணன் அன்புள்ள மணி
சில வருடங்களுக்கு முன்னர் நான் திரு கருணாநிதி அவர்களின் காலில்
எழுத்தாளர்கள் விழ முற்பட்டதைச்சொல்லி மிகக் கடுமையாக எதிர்வினையாறியிருக்கிறேன். அதிகாரம் பணம் ஆகியவறின் காலில் விழுதல் நம் மரபல்ல. அது கோழைத்தனமாகவே கருதப்படும். ஒருவன் பெறோர் அல்லது பெற்றோரின் இடத்தில் இருக்கும் மூத்தவர், குரு அல்லது குருவின் இடத்தில் இருக்கும் சான்றோர் ஆகியோரின் காலில் மட்டுமே விழவேண்டும். அது ஓர் உயர்ந்த மரபு. இம்மண்ணில் நாம் எத்தனை பெரியவரென்றாலும் நாம் ஒரு பெரிய ஓட்டத்தில் சிறு துளிகளே என்றும் ஒரு பெரிய சங்கிலியின் கண்ணிகளே என்றும் நமக்குணர்த்தும் விஷயம் அது. கல்வி மூலம் ஞானம் மூலம் வரும் மிக தவறான அம்சம் என்றால் அகந்தையே. அகந்தையை வெல்ல ஒரே வழி பணிய வேண்டிய இடத்தில் பணிதலே
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து
என்று சொல்கிறார் வள்ளுவர்
ஜெ
பரிமேலழகர் உரை
பிறர் நாணத் தக்கது தான் நாணான் ஆயின் - கேட்டாரும் கண்டாரும் நாணத்தக்க பழியை ஒருவன் தான் நாணாது செய்யுமாயின்; அறம் நாணத்தக்கது உடைத்து - அந்நாணாமை அவனை அறம்விட்டு நீங்கத் தக்க குற்றத்தினையுடையத்து
விளக்கம்
('தான்' எனச் செய்வானைப் பிரிக்கின்றார் ஆகலின்; 'பிறர்' என்றார். நாணோடு இயைபு இல்லாதானை அறம் சாராது என்பதாம்.)
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பெருமை என்று பணியும் - பெருமை யுடையோர் எக்காலத்துஞ் செருக்கின்றி அடங்கியொழுகுவர்; சிறுமை (என்றும்) தன்னை வியந்து அணியும் - மற்றச் சிறுமை யுடையோர் எக்காலத்துஞ் தம்மை மெச்சி உயர்வுபடுத்திக் கூறுவர்.
மாந்தரின் செயல்கள் அவர் பண்பின்மேல் ஏற்றிக் கூறப்பட்டன. 'என்றும் ' என்பது இரு தொடருக்கும் பொதுவாய் நின்றது. 'ஆம்' ஈரிடத்தும் அசைநிலை.
மணக்குடவர் உரை
பெருமை எக்காலத்தும் பிறரைத் தாழ்ந்தொழுகும்: சிறுமை தன்னைப் பெருக்க நினைத்து அலங்கரிக்கும். இது பெருமையாவது பணிந்தொழுகுதலென்று கூறிற்று.
சாலமன் பாப்பையா உரை
பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர்.