“கறையான் புற்றெடுக்க கருநாகம் குடியேறியது போல்”, என்பது முது மொழி.ஏழாவது ஊதியக்குழுவின் முடிவுகள் அதனை மெய்ப்பிக்கின்றன. 2வது ஊதியக் குழுவின் பாதகமான பரிந்துரைகளை எதிர்த்து 1960ஜூலை 12 முதல் மத்திய அரசு ஊழியர்களின் மகத்தான ஐந்து நாட்கள் வேலை நிறுத்தம் நடைபெற்றது. 56 ஆண்டுகள் சென்றும் மீண்டும் அதே கதை. ஏழாவது ஊதியக்குழுவின் மிகப் பாதகமான முடிவுகளை மாற்ற மறுக்கும் அரசின் போக்கை எதிர்த்து 2016 ஜூலை 11முதல் நடைபெற இருந்த வேலை நிறுத்தம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
2013 ஆகஸ்டில் அறிவிக்கப்பட்டு 2014 பிப்ரவரியில் நியமிக்கப்பட்ட ஊதியக்குழுகூடுதலாக 3 மாதங்கள் எடுத்துக் கொண்டு 2015நவம்பரில் அறிக்கை தந்தது. அதன் மிகப் பாதகமான முடிவுகளை எதிர்த்து ஊழியர் சங்கங்கள் உடனே போராடின. Empowered committee என்று சொல்லப்பட்ட மத்திய அமைச்சரவை செயலர் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் தொழிலாளர்களுடன்பேச்சுவார்த்தை நடைபெற்றது. எட்டுமாதங்கள் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
33 லட்சம் ஊழியர்களின் வேலைநிறுத்த அறிவிப்பு வழங்கப்பட்டது. தேசிய போராட்டக்குழு 14.06.2016-ல் பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியது. ஊதியக்குழுவின் மீதான மேம்படுத்தப்பட்ட முடிவுகளை அறிவிக்க வேண்டும். வேலைநிறுத்தத்தை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.அதேபோன்ற கடிதத்தை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் 17.06.2016ல்அனுப்பியது. 24.06.2016ல் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை முன்னிட்டு நாடாளுமன்றம் நோக்கி ஆர்பாட்டம் நடத்தினர். ஒரு வழியாக 29.06.2016-ல் எட்டுமாத அலைக்கழிப்புக்குபின் அணுவளவும் மாற்றம் இன்றி ஊதியக் குழு முடிவுகளை, அப்படியே ஏற்றுக் கொள்வதாக அரசு அறிவித்தது.
குறைந்தபட்ச ஊதியம் 7 ஆயிரத்தில் இருந்து18ஆயிரம் என உயர்த்தப்படுவதாகவும் அனைவருக்கும் 23.51 சதம் ஊதிய உயர்வுவழங்கப்படுவதாகவும் அறிக்கை கூறியது. அனைத்து நாளேடுகளும், ஊடகங்களும்,ஊழியர்களுக்கு அரசு வாரி வழங்கி விட்டதாக கதை அளந்தன. வேலையே செய்யாத அரசுஊழியர்கள் இனியாவது ஒழுங்காக வேலை செய்ய வேண்டும் என்று பல அதிமேதாவிகள்நீலிக்கண்ணீர் வடித்து அறிக்கை வெளியிட்டனர்.
ஆனால் உண்மை என்ன? 7000 என்பது 2006ல். அதன்பின் 125% க்கு மேல் விலைவாசி உயர்ந்துள்ளது. 01.01.2016ல் குறைந்த பட்ச ஊதியம் 15,750. இதற்கு 23.5% உயர்வு என்றால்19,500, ஆனால் 14.28% என்று 18,000 வழங்கப்பட உள்ளது. ஆனால் 2006ல் 90,000 பெற்ற உயர் அதிகாரிக்கு 2016ல் 2,02,500 க்கு23.5% உயர்வு வழங்கி 2,50,000 என்று
உயர்த்தப்பட்டுள்ளது. 1,80000 ஆயிரம் ஊதியம் பெற்று வந்த ஐ.ஏ.எஸ். உயர் அதிகாரிகளுக்கு40 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு25 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.2006-ல் குறைந்த பட்ச ஊதியத்திற்கும், உயர்ந்த அளவு ஊதியத்திற்குமான இடைவெளி 83,000இன்று 2,32,000 அடிமட்ட ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் 2,250.மேல் நிலை அதிகாரிக்கு அதைப் போன்று21.11 மடங்கு அதிகமாக 42,500வழங்கப்பட்டுள்ளது. அதாவது 21.11%வேறுபாடு.
1947ல் முதல் ஊதியக்குழு குறைந்த ஊதியம்30, ஆண்டு ஊதிய உயர்வு 8 அணா 35ரூபாயுடன் முற்றுப்புள்ளி என்று பரிந்துரைத்தது. உயர் அதிகாரிகளுக்கு 50மடங்கு அதிகமாக 1,500. பின் அது 3,000 வரை உயர்ந்தது. நாடு விடுதலை பெற்று 13ஆண்டுகள் பின்னர் 2-வது ஊதியக்குழு 30+25கிராக்கிப்படி என்பதை 60-01-75 என்று மாற்றியது. ஊழியர்கள் கேட்டது 15-வது முக்கூட்டு மாநாட்டின் பரிந்துரை அடிப்படையில் 125 ஊதியக்குழுவின் பரிந்துரைகள் பற்றி அன்றைய சிறந்த‘கேலிச்சித்திர’ வார இதழ் ‘சங்கர்ஸ் வீக்லி’ஒரு கருத்துப்படம் வெளியிட்டது. ‘ஒரு நாயின் வாலை வெட்டி, ஒரு பெரியதட்டில் வைத்து, மிக ஆர்பாட்டத்துடன், அந்த நாய்க்கே உணவாக வழங்குவது போன்று சித்தரிக்கப்பட்டு இருந்தது.
ஐந்து நாள் வேலைநிறுத்தம், 50,000க்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் கைது, நீதி மன்றங்களில் வழக்குகள். பல்வேறு தண்டனைகள் பிரதமர் நேருவின் அரசு,வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக சமாளித்ததாக பெருமை பாராட்டியது.
‘சங்கர்ஸ்வீக்லியில்’ மீண்டும் ஒரு கேலிச்சித்திரம். பிரதமர் நேருவும் அமைச்சரவையினரும், சிறிய புலிக் குட்டி ஒன்றை துப்பாக்கியால் சுட்டு தோளில் போட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் அரசுஊழியர்களின் குமுறல் என்ற பெரியபுலி புதர்களின் பின்னே மறைந்திருந்தது.
அடுத்தடுத்து, பல்வேறு போராட்டங்களுக்குப்பின் அமைக்கப்பட்ட 3வது, 4 வது ஊதியக்குழுக்களும், முந்தைய ஊதியத்துடன், கிராக்கிப்படியை இணைத்து புதிய ஊதிய விகிதங்களை நிர்ணயித்தன.5வது ஊதியக் குழு ஊதிய உயர்வு 20% என்றுஅறிவித்தது. மீண்டும் ஏமாற்றம். அன்றைய ஐக்கிய முன்னணி அரசின் நிதி அமைச்சர் ப.சிதம்பரம். ஊதியக்குழு வாரி வழங்கிவிட்டதாக நாடெங்கும் ஓடி, ஓடி பிரச்சாரம் செய்தார். ஊழியர்களின் எதிர்ப்பு தொடர்ந்தது. அன்றைய உள்துறை அமைச்சர் இந்திரஜித் குப்தா. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் புகழ்மிக்க தலைவர் தலைமையில் அமைச்சர் குழு 20% என்பதை 40% என்று உயர்த்தி நீதி வழங்கியது.
மீண்டும் நாய்வால் கதைக்கு வருவோம். மத்திய அரசில் இன்று 40.49 லட்சம் பணியிடங்கள் உள்ளன. ஆனால் 33.02 லட்சம் ஊழியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். 7.47லட்சம் ஊழியர் பற்றாக்குறை. இது இன்று,நேற்று அல்ல. 1984 முதல் வேலை நியமனத் தடை சட்டம். “இந்தியா ஒளிர்கின்றது”, என்ற வாஜ்பாயியின் ஆட்சிக்காலத்தில், மூவர் ஓய்வு பெற்றால் இருவர் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இரயில்வே துறையில் 2006ல் 15.97 லட்சம் பணி இடங்கள். 13.16 லட்சம் பணியாளர்கள். ஊழியர் பற்றாக்குறை 2.81 லட்சம் இன்று 4 லட்சம் பற்றாக்குறை இருக்கலாம்.பாதுகாப்புத்துறையில் (ராணுவம் அல்லாத 1.87லட்சம், உள்துறை அமைச்சகத்தில் 76,000,அஞ்சல் துறையில் 60,000 என்று பல்லாண்டு களாக ஊழியர் பற்றாக்குறை. இதன் விளைவா கக் கிடைத்த சேமிப்பின் ஒரு பகுதி யான நாய்வால் அளவு கூட ஊதிய உயர்வாக கிட்ட வில்லை.
நாட்டில் 80 லட்சத்திற்கும் மேற்பட்டபட்டதாரிகள், தொழில்துறை பட்டதாரிகள் வேலை வாய்ப்பு இன்றி தடுமாறுகின்றனர்.பிரதமர் மோடியின் அரசு, “குறைந்த அளவு அரசு! அதிக அளவு ஆட்சித்திறன்! என்று பெருமை பாராட்டிக் கொள்கின்றது.
இரயில்வே துறையில் Driver, Guard Signalingmaintenance போன்ற பல்வேறு பிரிவுகளில் ஊழியர்கள் தொடர்ந்து 12 மணி, 16 மணிநேரம்பணியாற்ற வேண்டி உள்ளது. இராணுவ தளவாட ஆயுத உற்பத்தித் தொழில்களில்பணியாற்று வோரின் நிலையும் இதுதான். நிதித்துறையின் CBI,ED, வருமானவரித் துறை போன்ற பலவற்றிலும் கடுமையான ஊழியர் பற்றாக்குறை. உள்துறை அமைச்சகத்தின் துணை ராணுவப் படைகளான CRPF, ITBP, BSFபோன்ற எண்ணற்ற பிரிவுகளில் பற்றாக்குறை,பணிச்சுமை, மன உளைச்சல், பாதுகாப்பின்மைதொடர்கின்றன. அஞ்சல் துறையில் ஊழியர் பற்றாக்குறை 60 ஆயிரம். இவை அனைத்தும் ஊதியக் குழுவின் அறிக்கையில் உள்ளன. அதற்கான தீர்வுகள் பற்றி எந்தப் பரிந்துரையும் இல்லை.
பெரும்பாலான அஞ்சலகங்களில் கணிப்பொறிகள் ஒழுங்காக வேலை செய்யாது.30%க்கு மேல் ஊழியர் பற்றாக்குறை.இடுபொருட்கள் பற்றாக்குறை. இனி “ஏன் இங்கு கங்கை நீர் விற்கவில்லை”, என்று அஞ்சலகத் தலைவரை சாடுவார்கள்.
ஒரு தபால்காரர் விடுப்பில் சென்றால் அடுத்த தபால்காரர், அந்த வேலையை சேர்த்து செய்யம் வேண்டும். அல்லது மறு நாள் அவர் மீண்டு வந்து செய்ய வேண்டும் ‘தனக்கு முன் சேவை’ என்ற லட்சியத்தை குறிக்கோளாக கொண்டுள்ள அஞ்சல் துறையில் ஒரு தபால்காரர் விடுப்பில் சென்றால் அவருக்கு பதிலியாக நியமிக்கப்படும் தற்காலிகஊழியருக்கு நாள் ஊதியம் 100 ரூபாய். இந்தக் கூலிக்கு யாரும் வரமாட்டார்கள். எனவே அதுவும் மிச்சம்.
“எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களாக வலம்வரும் அறிவு ஜீவிகளுக்கு” அரசு ஊழியர்கள் வேலை செய்வதில்லை, அவர்களுக்கு Bonanzaவழங்கப்பட்டுள்ளது என்று புலம்பத்தெரியும். ஆனால் அழுத பிள்ளைகளாக அடிமட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு ஏழாவது ஊதியக்குழுவாழைப்பழம் கூட Bonanza வழங்கவில்லை என்பது தான் உண்மை.
மத்திய அரசு ஊழியர்கள் போராடி வெற்றி கண்டால்தான், மாநில அரசு ஊழியர்களுக்கும்வழிபிறக்கும். மற்ற தொழிலாளர்களின் வாழ்வு மேம்பட உந்து சக்தியாக மாறும். இது ஒரு தேசபக்த போராட்டம்.
By
A.SOMASUNDARAM
Vice President
All India Federation of Pensioners Association.