ஆதார் அடையாள அட்டை திட்டத்தின் மூலம், இந்திய அரசு ஆண்டுக்கு ரூ.6,700 கோடி வரை இழப்பு ஏற்படுவதை தடுத்துள்ளது என உலக வங்கி பாராட்டியுள்ளது.
இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆதார் அடையாள அட்டை திட்டம் குறித்து வெகுவாக பாராட்டு தெரிவித்த உலக வங்கியின் தலைமை பொருளாதார வல்லுனர் கவுசிக் பாசு, இதுகுறித்து தெரிவித்ததாவது: இந்திய அரசின் நலத்திட்டங்கள் ஏழை, எளிய மக்களுக்கு எளிதில் சென்றடைய ஆதார் கார்டு திட்டம் உதவி செய்கிறது. ஆதார் கார்டு பயன்பாட்டினால் தேவையற்ற முறையில் பணம் வீணாவது தடுக்கப்பட்டு, முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் குறைகிறது. அரசின் திட்டங்களில் நடைபெற்ற முறைகேடுகள் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளன. இதனால் இந்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.6,700 கோடி(1 பில்லியன் டாலர்கள்) மிச்சமாகிறது. இந்நிதியை வளர்ச்சித் திட்டத்தில் பயன்படுத்தினால் இந்தியா மேலும் முன்னேறும்.
தகவல் தொடர்பு சம்பந்தபட்ட குறைபாடுகள், பிரச்சனைகளை சமாளிக்க ஆதார் உதவி செய்கிறது. இதுவரை கிட்டதட்ட ஒரு பில்லியன் பேருக்கு ஆதார் வழங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இந்தியாவின் 1.25 பில்லியன் பேருக்கும் ஆதார் அட்டையை வழங்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்
Source: Dinamalar